தமிழகத்தில் யாருக்கெல்லாம் இ பாஸ் நடைமுறை தொடரும்.? தமிழக அரசு அறிவிப்பு
E pass must for other country and other state traveller
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் அவசியம் என்ற நடைமுறை கடைபிடிக்கபட்டது.
இந்தநிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்ற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இ பாஸ் செயல்முறை தொடர்ந்து வந்தது. இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு காலதாமதம், இடையூறுகள், வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பொதுமக்கள் வலுயுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்து இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் . பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் வரும் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே என்றும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது பொருந்தாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு இப்போது இருக்கும் இ-பாஸ் நடைமுறை விதிமுறைகள் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.