குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன்!
குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த தம்பியை அடித்து கொன்ற அண்ணன்!
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தனிக்குப்பம் கிராமம் மதுகரை ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. கணவரை இழந்த இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வெங்கடேசன் திருமணம் ஆகி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வந்துள்ளார். இளைய மகன் கல்யாண சுந்தரத்திற்கு இன்னும் திருமணமாகாததால் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
இதில், கூலி தொழிலாளி என கல்யாண சுந்தரத்தின் மீது காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தாயார் ஆதிலட்சுமியை தொந்தரவு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று இரவு கல்யாணசுந்தரம் தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இது குறித்து மூத்த மகன் வெங்கடேசனிடம், கல்யாணசுந்தரம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக கல்யாண சுந்தரத்தை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகளாக மாறிய நிலையில் வெங்கடேசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து கல்யாணசுந்தரத்தை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து வெங்கடேசன் மங்களம் காவல் நிலையத்திற்கு சென்று தம்பியை அடித்து கொன்றது குறித்து போலீசில் சரணடைந்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கல்யாண சுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.