விவசாயமே அழியும் நிலை! உச்சகட்ட வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!
farmers buy water to cost
ஆரம்ப காலத்தில் விவசாயம் மூலம் செழித்து காணப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், தற்போது மழையின்மை காரணமாக வறண்ட பூமியாக காணப்படுகிறது. 600 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு தோன்றினாலும் பல இடங்களில் நிலத்தடி நீர் இருப்பதில்லை.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வாணக்கண்காடு, கருக்காக்குறிச்சி, வடகாடு, மாங்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர் விவசாயிகள். அப்பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் பல விவசாயிகள் விவசாயத்தை நிறுத்திவிட்டு தருசுநிலங்களாக போட்டுவைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், சோளம், வாழை, கரும்பு, கத்தரி, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய் போன்ற பயிர்களும், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பூஞ்செடி வகைகளையும் பயிரிட்டு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தற்போது, கோடை வெயில் மற்றும் கத்திரி வெயில் கடுமையாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. இதனால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் இதற்குமுன்னர் பயிரிட்ட பயிர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், தண்ணீரை ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை கொடுத்து லாரி மூலம் கொண்டு வந்து பாய்ச்சி வருகின்றனர்
விவசாயிகள் இலவச மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி அறுவடை செய்யும்பொழுதே அவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இந்தநிலையில், காசுகொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சும் செலவுக்காவது வருமானம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் வேதனையுடன் விவசாயம் செய்து வருகின்றனர்.