மதுரை மக்களுக்கு சோகமான செய்தி! சித்திரை திருவிழா ரத்து!
மதுரை சித்திரை festival cancelled
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மே 4-ந் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் என்றும், ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார். இந்த செய்தி மதுரை மக்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் மக்களுக்கு இந்த சித்திரை திருவிழா தான் பெரும் மகிழ்ச்சியை தரும்.
மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில் முதன்மையானது மீனாட்சி அம்மன் கோயில். மதுரைக்காரர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் ஆடல், பாடலுடன் களைகட்டும் சித்திரை திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாண தேரோட்டம் போன்றவை உலக புகழ் பெற்றவை.
சித்திரை திருவிழா நாட்களில் மதுரை மாநகரம் விழா கோலாகலமாக காட்சி அளித்து, தேரோட்டத்தின் போதும், அழகர் ஆற்றில் இறங்கும் போதும் மதுரை, மக்கள் வெள்ளத்தில் மிதப்பார்கள்.
இந்தநிலையில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாலும், நோய்த்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.