நட்சத்திரவிடுதியில் திடீர் தீ விபத்து.. 5 மணிநேரம் போராடி நடந்த தீயணைப்புப்பணி.!
நட்சத்திரவிடுதியில் திடீர் தீ விபத்து.. 5 மணிநேரம் போராடி நடந்த தீயணைப்புப்பணி.!
தனியாருக்கு சொந்தமான நட்சத்திர விடுதியில், திடீரென தீ பிடித்ததால் 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோஹினூர் சிக்னல் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான நட்சத்திரவிடுதி ஒன்று உள்ளது. அங்கு நேற்றிரவு நான்காவது மாடியில் திடீரென தீப்பற்றிய நிலையில், ஐந்தாவது மாடிக்கும் நெருப்பு பரவி புகைமூட்டமாக இருந்துள்ளது.
இதன் காரணமாக விடுதியில் இருந்த 40 அறைகளில் தங்கியிருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேறியதை தொடர்ந்து, மின்சார ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சார மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயை அணைக்க 3 வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் 5 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகலான பாதையில் இருந்த காரணத்தால் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது என்றும், தண்ணீர் லாரிகளை மாநகராட்சி தரப்பில் அனுப்பாததால் சிக்கலை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தில்லை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், விடுதியின் 3,4 மற்றும் 5ஆவது மாடிகளின் சுவர்கள் முற்றிலும் சேதமடைந்தது தெரியவந்தது.
மேலும் இந்த விபத்து ஏற்பட்ட விடுதியில் தீ தடுப்பு சாதனங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் தீ பிடித்ததற்கு என்ன காரணமாக இருக்கும்? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.