ஏமாளி, கோமாளி.. ரைமிங்கில் பேசி டைமிங்கில் பஞ்ச் வைத்த முன்னாள் அமைச்சர்.. பரபரப்பு பேச்சு.!!
ஏமாளி, கோமாளி.. ரைமிங்கில் பேசி டைமிங்கில் பஞ்ச் வைத்த முன்னாள் அமைச்சர்.. பரபரப்பு பேச்சு.!!
திமுக கட்சிக்கு ஓட்டு போட்ட மக்களை அரசு ஏமாளியாக்கி, கோமாளியாக்கியுள்ளது. சொத்து வரி இரத்து செய்யப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் போர்க்கொடி தூக்கி பரபரப்பாக பேசினார்.
தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சொத்து வரிகளை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் நேற்று மாபெரும் போராட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசுகையில், "தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது. மாநகராட்சியில் 150 % சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சிக்கு ஓட்டு போட்ட மக்களை அரசு ஏமாளியாக்கி, கோமாளியாக்கியுள்ளது. 10 வருட அதிமுக ஆட்சிக்காலத்தில் சொத்துவரி உயர்த்தப்படவில்லை. திமுக தலைமயிலான தமிழக அரசின் செயலால், பலரும் வீட்டினை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரியினை இரத்து செய்து உத்தரவிட வேண்டும். ஏற்கனவே சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி உயர்வால் மக்கள் மேலும் அவதிப்பட நேரிடும். அடுத்தடுத்த மாதத்தில் பிற பொருட்களின் விலையும் உயரும். இவ்வாறாக அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தால் மக்கள் என்ன செய்வார்கள். திமுகவினர் வாழ மக்களை பலிகடா ஆக்கியுள்ளனர்.
அதிமுக என்ற இயக்கம் மக்களுக்காக என்றும் குரல் கொடுக்கும். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க இயலாது. அதிமுகவே நமது பெருமை. அதனை விட்டு வெளியேறினால் சிறுமை தான் வரும். அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்களை பற்றி கவலைகொள்ள வேண்டாம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும், அம்மாவின் ஆட்சி மலரும். அது உறுதி" என்று தெரிவித்தார்.