அம்மா உணவகங்கள் அனைத்திலும் இலவச சாப்பாடு! சென்னை மாநகராட்சி அசத்தல்!
Free food in amma hotel
சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்திலும் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலின் எண்ணிக்கை குறையாததால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் பசியை போக்க அம்மா உணவகங்கள் பெரிதும் கைகொடுத்து வந்தன. அம்மா உணவகத்தில் இருந்து, பாத்திரங்களிலும் சாப்பாடு வழங்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கவேண்டும் என்றும், அதற்கு உதவி புரிய தயாராக இருப்பதாகவும் தன்னார்வலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் நேற்று, மக்கள் நலன் கருதி சென்னையில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களிலும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தினந்தோறும் 3 வேளைகளும் இலவச உணவு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தகவல் தெரியாமல் நேற்று அம்மா உணவகங்களில் சாப்பிட வந்த மக்கள் காசு கொடுத்து டோக்கன் வாங்க முயன்றனர். அப்போது இலவச உணவு திட்டத்தை ஊழியர்கள் தெரிவிக்க அவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டு சென்றனர். சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.