மெழுகுதிரி வெளிச்சத்தில் இலவச மருத்துவ முகாம்! கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவர்கள் சேவை
free medical camp for gaja affected people
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு தேனி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இலவசமாக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து மக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தென் பகுதிகளான ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம் ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. அவர்கள் ஆசை ஆசையாய் வளர்த்த பலா மரம், மாமரம், தென்னை மற்றும் இன்னும் பல மர வகைகள் அனைத்தும் வேரோடு சாய்ந்து விட்டன. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தேனி மற்றும் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியுள்ளனர்.
இந்த மருத்துவ முகாம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்த மருத்துவர் அமுதவாணன் தனது சொந்த முயற்சியால் தனது நண்பர்கள் மூலம் வெற்றிகரமாக நடத்திய நடத்தியுள்ளார். கஜா புயல் தாக்கிய சில நாட்களுக்கு பிறகு மருத்துவர் அமுதவாணன் தன்னுடன் பயின்ற மருத்துவர்களுக்கு தனது முகநூல் பக்கத்தின் மூலம் ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அதில் தனது சொந்த கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யலாம், இதற்கு ஆர்வமுள்ளவர்கள் என்னுடன் கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரோடு தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மருத்துவர்கள் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மருத்துவர்களும் உதவி செய்ய முன் வந்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25ஆம் தேதி தனது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மூலம் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்தார் மருத்துவர் அமுதவாணன்.
மேலும் தான் பணிபுரியும் பழனி பகுதியில் தன்னால் இயன்ற நிவாரண நிதியை திரட்டி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கி செல்ல முடிவு செய்தார். அதன்படி திரட்டிய நிதியிலிருந்து மருத்துவ முகாமிற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் இதர நிவாரண பொருட்களுடன் மருத்துவ குழுவானது கொத்தமங்கலம் கிராமம் பகுதியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்றது. அன்று காலையில் தொடங்கிய மருத்துவ முகாம் இரவு முதல் நடைபெற்றது. மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட மருத்துவர்கள் தங்களது சேவையை மிகவும் திறம்பட செய்தனர்.
தான் பிறந்த மண்ணில் தன் சொந்தங்கள் சிரமப்படுவதை உணர்ந்து தன்னுடைய மருத்துவ சேவையை அவர்களுக்கு எப்படியாவது வழங்கிவிட வேண்டும் என்ற விடாமுயற்சியால் இந்த முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்த மருத்துவர் அமுதவாணன் மற்றும் அவரோடு இந்த முகாமில் கலந்துகொண்ட மற்ற மருத்துவர்களான அபர்ணா, பிரமோத், பொற்கொடி, பாலமுருகன், கணேஷ் ராஜ், தீபக் ராஜ், ஷேக் மற்றும் தேவ் ஆகியோருக்கு அந்த பகுதி கிராம மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.