ஒவ்வொரு வீட்டுக்கும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.! தமிழக முதல்வரின் அதிரடி உத்தரவு.!
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக கூடுதலாக ரூ.1,805 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு அளவு தொகை 1.70 லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட உத்தரவில், “பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016 - 17 முதல் 2019 - 20 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ. 8,968 கோடி மதிப்பீட்டில், 5,27,552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 4,01,848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டிற்கான அளவு தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசின் 60 சதவீத பங்கு தொகை 72 ஆயிரம் ரூபாய் மற்றும் மாநில அரசின் 40 சதவீத பங்கு தொகை 48 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்தநிலையில், கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு கூடுதல் நிதியாக ரூபாய் 50,000 ஒவ்வொரு வீட்டிற்கும் அளித்து வருகிறது. இந்த தொகையுடன் ஒரு வீட்டிற்கான மொத்த அளவு தொகை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும்.
தற்போது கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அளவு தொகையை கொண்டு ஏழை எளிய மக்கள் வீட்டினை கட்ட இயலாத நிலை உள்ளதால் ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசால் ஏற்கனவே மேற்கூரை அமைக்க கூடுதலாக வழங்கப்பட்டு வந்த 50,000 ரூபாயை உயர்த்தி ஒரு லட்சத்தி இருபதாயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழக அரசால் கூடுதலாக 1805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறுவர். ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்க மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.