தஞ்சை-புதுகை நெடுஞ்சாலையில் போலீசார் குவிப்பு! திடீரென ஸ்தம்பித்த போக்குவரத்து
gaja affected people strike for relief fund
தஞ்சை-புதுகை நெடுஞ்சாலையில் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் வழங்காததால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை-புதுகை நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்றுவரை கஜா புயலால் பாதித்த மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை என மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் ஊராட்சி, மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊருக்கு எவ்வித நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை என அற்புதபுரம் அருகே தஞ்சாவூர்- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த திருக்கானுர்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திவ்யா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் தாசில்தார் வந்து பேசும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் டிஎஸ்பி மற்றும் தாசில்தார் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை புரிந்தனர். அவர்கள் மக்களிடம், உங்கள் கோரிக்கைகளை ஏற்று அதற்கான தீர்வுகளை செய்து கொடுக்கிறோம். எல்லாம் வாக்குறுதி அளித்தனர் மேலும் தற்பொழுது அவர்களது காமத்திலிருந்து கிராமத்தில் வந்து பார்வையிட போவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என தெரிவித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் தஞ்சாவூர்- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அந்த வழியே வந்த 2 அம்புலன்ஸ்களுக்கு மட்டும் மக்கள் வழி விட்டனர்.