உணவகத்தில் சாப்பாடு விலை அதிரடியாக உயருகிறது.. மக்கள் கவலை..!
உணவகத்தில் சாப்பாடு விலை அதிரடியாக உயருகிறது.. மக்கள் கவலை..!
சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒரே நாளில் ரூ.268 ஆக உயர்த்தப்பட்டதால், சிலிண்டரின் விலை தற்போது 2,406 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாக ஹோட்டலில் உள்ள உணவுகளின் விலையும் உயர்கிறது. உதாரணமாக டீ விலை ரூ. 2 லிருந்து ரூ. 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் உணவு பண்டங்களின் விலையும் 20 சதவீதமாக உயர்த்த ஹோட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக சென்னை ஓட்டல் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
"எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது உணவகத் தொழிலில் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1200 ஆக இருந்த சிலிண்டரின் விலையானது தற்போது ரூ.2400 க்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டில் எண்ணெய் லிட்டருக்கு ரூ.120 ஆக இருந்து, தற்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் அரிசி, பருப்பு மற்றும் சமைப்பதற்கான மூலப்பொருட்களின் அனைத்து விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் உணவு தயாரிக்க 16 முதல் 20 சதவீதமாக எங்களுக்கு செலவினம் அதிகமாகும். இந்த செலவினங்களை நாங்கள் ஈடுகட்டுவதற்காக உணவுகளின் விலையை உயர்த்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த விஷயம் தொடர்பாக பேசி முடிவெடுப்பதற்காக வரும் 6ஆம் தேதி ஓட்டல் அதிபர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அன்று விலை உயர்வு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், உணவுகளின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இருப்பினும் 16 முதல் 20 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே கட்டுபடியாகும். அதன்பின் படிப்படியாக சூழ்நிலைக்கு ஏற்ப உணவு பண்டங்களின் விலைகளில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். உணவுகளைப் பொறுத்தவரை சிறிய கடைகளில் மிகக் குறைந்த விலையாகவும், நடுத்தர கடைகளில் அதற்கு ஏற்றார் போலவும் மற்றும் உயர்தர ஹோட்டல்களில் அதற்கு ஏற்பவும் விலைகள் உயர்த்தப்படும்.
சென்னையில் சைனீஸ் உணவு வகைகளை விடவும், தென்னிந்திய உணவு வகைகளே அதிக அளவில் விற்பனையாகிறது. உதாரணமாக இட்லி ரூ.30 க்கு விற்பனையானால் தற்போது ரூ.33 ஆக உயரும். இதுபோன்று ஒவ்வொரு உணவின் விலையும் உயர உள்ளது. மத்திய அரசின் கொள்கை ரீதியாக முடிவெடுத்து உணவகங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டால், விலை ஏற்றத்தை தவிர்க்க முடியும்" என கூறியுள்ளார்.
மேலும், உணவுகளை பொருத்தவரை பொங்கல், இட்லி மற்றும் பூரி போன்ற உள்ளிட்ட உணவுகளில் ரூ.5 உயரும் எனவும், சாப்பாடு மற்றும் பிரியாணி வகைகளில் ரூ.20 உயரும் எனவும் ஓட்டல் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.