தினமும் அம்மாவிடம் தகராறு செய்து வந்த தந்தை!. மனமுடைந்த மகள் கொடுத்த வித்தியாசமான, அசத்தலான தண்டனை!
girl ordered father to clean the pond for talk with her
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மருதவனம் காலனி தெருவில் வசித்து வந்தவர் சிவக்குமார். இவரது மனைவி அருள்மொழி. இவருக்கு விவேகானந்தன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், நதியா என்ற ஏழாம் வகுப்பு படிக்கும்மகளும் உள்ளனர்.
இந்நிலையில் பிள்ளைகள் மீது அதீத அன்பு வைத்திருந்த விவசாயியான சிவகுமார் காஜா புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டார். அவரது வீடு இடிந்தது. அவருக்கு சரிவர வேலையும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சிவகுமார் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால், மிகுந்த வேதனையடைந்த சிவக்குமாரின் மகள் நதியா, அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். கோபம் குறைந்து தனது மக்கள் தன்னிடம் எப்படியும் பேசுவாள் என்று சிவக்குமார் முதலில் நினைத்துள்ளார். ஆனால் கடந்த 8 மாதத்திற்கு மேல் நதியா தந்தையிடம் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது மகள் தன்னிடம் பேசாததை நினைத்து மனம் வருந்திய சிவக்குமார் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் என்னிடம் நீ பேச வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு நதியா, இனிமேல் அம்மாவிடம் சண்டை போடக்கூடாது. நான் படிக்கும் பள்ளிக்கு அருகே கருங்குளத்தில் நிறைய குப்பைகள் உள்ளது. அந்த குப்பைகளை அகற்றி குளத்தை சுத்தம் செய்தால் நான் உங்களிடம் பேசுவேன் என கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து சிவகுமார் உடனே அந்தக் குளத்தை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்கினார். நாள் முழுவதும் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டியுள்ளார். மேலும் தனது கணவர் படும் சிரமத்தைப் தாங்கிக்கொள்ள முடியாமல், அவரது மனைவியும் சேர்ந்து அந்தக் குளத்தைச் சுத்தப்படுத்தியுள்ளார். இதன் பிறகு தந்தையிடம் நதியா பேசத்தொடங்கியுள்ளார். தந்தை செய்த தவறுக்கு இப்படியொரு வித்தியாசமான தண்டனை கொடுத்த சிறுமி நதியாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.