முகூர்த்த நேரத்தில் தாலியை பிடுங்கிய மணப்பெண்! களேபரமான கல்யாண நிகழ்வு!!
முகூர்த்த நேரத்தில் தாலியை பிடுங்கிய மணப்பெண்! களேபரமான கல்யாண நிகழ்வு!!
ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை அருகே கிராமம் ஒன்றில் பட்டதாரி வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இவருக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பேசி இருந்ததை தொடர்ந்து சொந்த ஊருக்கு திரும்பிய வாலிபர் திருமணத்திற்காக ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.
இதை தொடர்ந்து, போன மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. பின்பு திருமணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளனர். பின்னர் முகூர்த்த நாளான நேற்று இவர்களுக்கு திருவாடானையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
அப்பொழுது மணமகன் தாலி கட்டும் சமயத்தில், மணப்பெண் அவரிடம் இருந்து தாலியை பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணப்பெண்ணிடம் தாலியை மாப்பிள்ளையிடம் கொடு என்று அறிவுறுத்தியும், மணமகள் தாலியை கொடுக்க மறுத்துள்ளார்.
நான் தாலியை கொடுக்க மாட்டேன், உண்டியலில் தான் போடுவேன் என்று அடம் பிடித்துள்ளார். பின்னர் கடுப்பான மணமகன், பிடிக்கவில்லை என்றால் முன்பே கூறியிருக்கலாமே நிச்சயதார்த்தம் முடிந்து இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது இப்படி செய்தால் எப்படி? என்று கேட்டதற்கு, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என் பெற்றோர்கள் தான் என்னை வற்புறுத்தினார்கள் என்று விடாப்பிடியாக கூறியிருக்கிறார்.
பின்னர் மணமகன் இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இந்த திருமணத்திற்காக நான் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறேன். தற்போது நான் மன உளைச்சலுக்கு ஆளாகிய உள்ளேன் என்று புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணும் எனது சம்பந்தமில்லாமல் எனது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து விட்டார்கள் என்று புகார் கூறியுள்ளார்.
இதற்கிடையில் கோவிலில் திருமணம் நடந்து கொண்டிருக்கும்போது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், கோவிலில் என்ன நடக்கிறது என்றே தெரியாமலே அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் என விருந்துக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிவிட்டு சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.