எவ்வளவு பெரிய மனசு..! எடப்பாடி பழனிசாமி கேட்டதற்காக மு.க.ஸ்டாலின் செய்த காரியம்.! மாஸ் காட்டும் முதல்வர்.!
முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலை பங்களாக்களில் புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் வசித்த அதிமுக அமைச்சர்கள், திமுக ஆட்சி அமைத்ததை அடுத்து பங்களாக்களை காலி செய்து வருகின்றனர். இந்தநிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து அதே பங்களாவில் தங்குவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக எடப்பாடி கே.பழனிசாமி தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு அதே பங்களாவில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கிரீன்வேஸ் சாலை பங்களாக்களில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மீண்டும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரர் மறைவால் பங்களாவை காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார். தற்போது திமுக அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்களாக்களில் மராமத்து வேலை நடந்து வருகிறது. மராமத்து பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது.
தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது "தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்த கலைஞருக்கு ஆறு அடி இடம் தர மறுத்தவர் எடப்பாடி பழனிசாமி'' என்று அடிக்கடி கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது பழைய கசப்புகளை மறந்து அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.