கலாம் அய்யாவின் கனவை நினைவாக்க நாசாவுக்கு செல்லும் புதுக்கோட்டை அரசு பள்ளி ஏழை மாணவி!
Govt school girl going to Nasa
புதுக்கோட்டை மாவட்டம் இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிக்கு நாசா செல்ல வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்த வாய்ப்பினை உபயோகம் செய்து கொள்ள பணமின்றி தவித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஜெயலட்சுமி, படிப்பதையும் தாண்டி குடும்பத்தின் வரவு செலவுகளை கவனித்து வருகிறார். தற்போது 11 ஆம் வகுப்பு பயின்று வரும் ஜெயலட்சுமி அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் மற்றும் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோபர்க்குரு என்ற இணையம் மூலமாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு திருச்சியை சார்ந்த தான்யா என்ற மாணவி வெற்றிபெற்று நாசா செல்லும் வாய்ப்பை பெற்றது குறித்த செய்தியை நாளிதழ் மூலமாக படித்துள்ளார்.
இதனையடுத்து நாசாவிற்கு செல்ல விருப்பப்பட்டு இப்போட்டிக்கு விண்ணப்பித்து, தமிழ் மொழியில் படித்து வந்தாலும் ஆங்கிலத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்போட்டியின் முடிவுகள் வெளியான நிலையில், ஜெயலட்சுமி இப்போட்டியில் தேர்வாகி நாசாவிற்கு செல்ல தேர்வாகியுள்ளார்.
ஆனால் நாசாவிற்கு செல்லும் மாணவர்களின் கைகளில் இருந்து ரூ.1.7 இலட்சம் செலவும் ஆகும் என்ற நிலையும் உள்ளது. படிப்பிற்கே பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சிரமப்பட்டு ஜெயலட்சுமி நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு குறித்தும், தனது குடும்ப சூழ்நிலை குறித்தும் கோரிக்கையாக மாவட்ட ஆட்சியருக்கு வைக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, இந்த மாணவியின் கோரிக்கையை ஏற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.உமாமகேஸ்வரி இஆப., அவர்களின் முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த மாணவிக்கு அமெரிக்கா சென்று வருவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்பதாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளித்துள்ளார்கள். இந்த மாணவி வரக்கூடிய மே மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
இந்தநிலையில் ஏழை மாணவிக்கு உதவிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் நன்றிகளை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.