தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கொட்டி தீர்க்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!
heavy rain in tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து கொண்டு இருக்கிறது. இந்தநிலையில் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தருமபுரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துவருவதால் தமிழக விவசாயிகள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.