அலார்ட்! துவங்கயது பருவமழை; கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க எளிய டிப்ஸ்
how to avoid mosquito at rainy season
நீண்ட நாட்களாக மழையே இல்லாமல் வறண்டு போயிருந்த தமிழகத்தில் ஆங்காங்கே தற்போது பருவமழை பெய்யத் துவங்கியுள்ளது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை விடிந்தும் தூறல் போட்டுக் கொண்டே இருக்கிறது. சாலையோரங்களிலும் வீட்டின் முன் புறங்களிலும் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிகிறது.
வறண்டு போன பூமியில் மழை பெய்ததை நினைத்து குதூகலப்படும் இதே சமயத்தில், அடுத்து வரப்போகும் பிணிகளை குறித்தும் அஞ்ச வேண்டிய நேரம் இது. குறிப்பாக கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்து தான் இந்த மழை காலத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரே இடத்தில் நீர் அதிகமாக தேங்கி இருக்கும் போது தான் கொசுக்களின் உருவாக்கமும் அதிகமாகிறது. இதனால் நம்மை சுற்றி இருக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது. மேலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் மூடிகள் என சிறுசிறு பொருட்களில் தேங்கியிருக்கும் நீரினை தயவுசெய்து கீழே சாய்த்து விடுங்கள். கொசுக்களின் உருவாக்கத்தை நாம்தான் இதைப் போன்ற சிறுசிறு செயல்களால் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் வீடுகளின் ஜன்னல்களில் கொசு வலைகளை பயன்படுத்துவதன் மூலம் வீட்டிற்குள் கொசு வராமல் தடுத்துக்கொள்ள முடியும். சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொசுக்கள் குழந்தைகளை நெருங்காமல் இருக்க கடைகளில் விற்பனையாகும் சில திரவங்களை தடவிக் கொள்வதும் சிறந்தது.
மழைக்காலத்தில் ஆரம்பத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருந்து விட்டால் பின்வரும் விளைவுகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. வருமுன் காப்போம் என்ற கொள்கையை அனைவரும் பின்பற்றினாலே இந்த காலத்தில் வரும் பல நோய்களை நாம் அடியோடு அழித்துவிட முடியும். வாருங்கள் இணைந்து செயல்படுவோம்!