போகி எதிரொலி: சென்னையில் விமான சேவை பாதிப்பு; பயணிகள் அவதி.!
india chennai airport - default in air travels
கடும் பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
போகி பண்டிகை என்பது பொங்கலை கொண்டாடும் விதமாக தமிழக மக்கள் தங்கள் வீடுகளிலுள்ள பழைய உபகரணங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி தூய்மையை கடைபிடிப்பது வழக்கம்.
தமிழகத்தில் இன்று போகிப் பண்டிகை என்பதால் மக்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள மக்களும் வழக்கம்போல் போகி கொண்டாடினர். இதனால் வெளி வந்த மாசு கலந்த புகையானது பனி மூட்டத்துடன் சேர்ந்து இருளாக மாறியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, புனே, திருச்சி, மும்பை, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சுமாா் 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்னா் விமானங்கள் புறப்பட்டன. மேலும் சென்னை - பெங்களூரு, மும்பை – சென்னை ஜெட் ஏா்வேஸ் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.