இருமுடியுடன் பொதுக்கூட்டத்தில் சிக்கி தவித்த ஐயப்ப பக்தர்கள்! இஸ்லாமியர்கள் செய்த செயல்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
islam people help ayyapa devotee in kovai
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது.
மேலும் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசார்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியது.
மேலும் மங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி சென்ற நிலையில் மருத்துவமனையின் உள்ளே நுழைந்த சில போலீசார் அங்கு அத்துமீறல்களில் ஈடுப்பட்டனர்.இவ்வாறு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் பெருமளவில் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மேலும் மலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் சாலையிலேயே நின்று தொழுகையும் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சாலையில் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டதால், அந்த கூட்டத்தை கடக்க முடியாமல் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிலர் தவித்து வந்துள்ளனர். அப்பொழுது இஸ்லாமியர்கள் சிலர் அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல், பாதை ஏற்படுத்தி கொடுத்து சாலையைக் கடக்க உதவியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.