முதல்முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு; மார்ச் 5-ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்..!!
முதல்முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு; மார்ச் 5-ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்..!!
மார்ச் 5-ஆம் தேதி சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில் 501 காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்குகிறனர். தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவால் இடையில் தடை ஏற்பட்டது.
இந்த வருடம் மீண்டும் ஜல்லிக்கட்டு, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு மிக விமரிசையாக நடைபெறும். இதுதவிர பல கிராமங்களிலும், இந்த வீரவிளையாட்டு நடத்தப்படுகிறது.
ஆனால் இந்த வருடம் சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமாக இருந்தது சென்னை, மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம் தான். எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்வி இருந்து வந்தது.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற மார்ச் மாதம் 5-ஆம் தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளதாக செய்திவெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தமிழக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 5-ஆம் தேதி காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஆசை நிறைவேறும் வகையில் நடக்க இருக்கும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உள்பட சிறந்த 501 காளைகள் போட்டியில்இடம் பெற உள்ளன. தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர். மேலும் மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது.10 ஆயிரம் பேர் இந்த போட்டியை பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கி விட்டது. இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.