அரசு போக்குவரத்து பணிமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.!
kadalur bus tippo - collector anpuselvan
சுகாதார சீர்கேட்டுடன் இருந்த கடலூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. ஆனால் பருவ காலத்தில் மழை பொழிகிறதோ இல்லையோ ஆனால் வீடுகள் தோறும் மக்கள் நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொழிந்தது சிறிதளவு மழையே ஆயினும், அது சாலைகள் வீட்டின் அருகில் உள்ள பள்ளங்கள் மற்றும் பழைய வீட்டு உபயோக பொருட்களில் தேங்கி அதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மருத்துவமனைக்கு அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அவல நிலை தொடர்கிறது.
இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பணியாளர்களை நியமித்து ஒவ்வொரு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காய்ச்சல் ஏற்பட்ட உடன் பொது மக்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் காய்ச்சலால் அவதிப்பட்டு தினந்தோறும் இறப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொசு உற்பத்தியாகும் அளவுக்கு சுகாதார சீர்கேடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நோய் தொற்று பரவும் இந்த நேரத்தில் இவ்வாறு சுகாதார சீர்கேடு பணிமனை இருக்கலாமா என்று கேள்வி எழுப்பி ரூபாய் 50,000 அபராதம் விதித்தார். இதனால் பணிமனை சற்று பரபரப்புடன் காணப்பட்டது.