கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்... டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி..!
கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம்... டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி..!
சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி இறந்த வழக்கில் தாளாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அருகில் உள்ள கனியாமூரில் இருக்கும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு, மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மறியது. இதில் அந்த பள்ளியின் அனைத்து வகுப்பறைகளும் அடித்து நொறுக்கப்பட்டதோடு பள்ளிக்கு சொந்தமான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை தமிழக காவல்துறை அதிகாரி டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அப்பள்ளிக்கு நேரில் சென்று கலவரம் நடந்த இடத்தை பார்வையிட்டார். அதன் பிறகு டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது,
மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சில போராட்டங்கள் நடந்தது. போராட்டக்காரர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். மாணவியின் பெற்றோரின் சந்தேகங்களையும் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்தனர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் இருக்க கடந்த நான்கு நாட்களாக போலீசார் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் கூட டி.ஐ.ஜி. தலைமையில் இரண்டு எஸ்.பி.க்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதையும் மீறி கலவரம் நடந்துள்ளது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 70 பேரை கைது செய்திருக்கிறோம். சட்ட விரோதமாக கூடியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது அங்கு கலவரம் அடங்கியிருக்கிறது. இந்த கலவரத்தில் ஒரு டி.ஐ.ஜி., இரண்டு எஸ்.பி.க்கள் மற்றும் 52 போலீசார் காயமடைந்துள்ளனர்.
மாணவியின் மரணம் மற்றும் விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு மேல்விசாரணைக்காக இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோருக்கு இருக்கக்கூடிய அனைத்து சந்தேகங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து, அதற்கான பதிலை சொல்வார்கள். இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் மற்றும் பள்ளியை தாக்குவதற்கான காரணம் என்ன, என்பது குறித்து தனியாக புலன் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் கலவரம் தொடர்பாக வாட்ஸ்-அப் குழுவை உருவாக்கி நடத்தியவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகின்றது. இந்த கலவரத்தை முக்கியமாக இருந்து செய்தவர்கள் யார் என்று வீடியோவில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து இந்த கலவரத்தில் காயமடைந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை மாநில உள்துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி மற்றும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.