திருமணம் முடிந்த 6 மாதத்தில், மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் தற்கொலை..!
திருமணம் முடிந்த 6 மாதத்தில், மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் தற்கொலை..!
கருசிதைவால் மன வருத்தத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் மீது அலாதி காதல் வைத்திருந்த கணவனும் கிணற்றில் குதித்து தன்னுயிரை மாய்த்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகோவிந்தன் (வயது 27). இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். கும்பகோணத்தை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 24). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்கு பின்னர் அடுத்தடுத்து 3 முறை கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்ட காரணத்தால், மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள இயலாத ஹரி கோவிந்தன், நண்பர்களிடம் மனைவி இல்லாத உலகத்தில் வாழ விருப்பமில்லை என்று வேதனை தெரிவித்து வந்துள்ளார்.
கடந்த வாரத்தில் மனைவி நல்லடக்கம் செய்யப்பட்ட சுடுகாட்டுக்கு சென்ற ஹரிகோவிந்தன், மனைவியின் ஆவி எனது உடலில் புகுந்துவிட்டது. நானும் ஆவலுடன் சொல்லப்போகிறேன் என்று தெரிவித்த வண்ணம் இருந்துள்ளார். அவரை மீட்ட நண்பர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் உணவு சாப்பிடாமல் வேதனையில் ஹரி இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு 11 மணியாகும் ஹரி கோவிந்தன் வீட்டிற்கு வராத நிலையில், அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை மற்றும் நண்பர்கள் ஹரியை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இன்று காலை வரை ஹரி கோவிந்தனை தேடி பார்த்த நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு அருகே ஹரி கோவிந்தனின் கைலி இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கிணற்றில் இறங்கி தேடி பார்த்தபோது ஹரி கோவிந்தன் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலை மீட்ட அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எடைக்கல் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், ஹரி கோவிந்தன் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில், மனைவி தற்கொலை செய்துகொண்டதால், அவரின் இழப்பை தாங்க இயலாமல் அவருடன் செல்வதாக இறுதி குறிப்பில் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.