×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுவரை செய்தது முதலுதவி தான்; டெல்டா விவசாயிகளின் தேவை என்ன! கமல் விளக்கம்

kamal worries about delta farmers

Advertisement

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு வந்த மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் அங்குள்ள மக்கள் படும் துயரங்களை பற்றி பட்டியலிட்டுள்ளார்.

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மூன்றாவது முறையாக நேற்று பார்வையிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே, வெள்ளூர் கிராமத்தில் தென்னை விவசாயிகளிடம் பேசியபோது, கமல் கண் கலங்கினார். அரசு செய்யாததை,தனி மனிதர்கள் செய்து விட்டனர். வசதியாக இருந்த குடும்பங்கள் எல்லாம், ஒரே இரவில் ஏழையாகி விட்டன. இதை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இது குறித்து ஆதரவு திரட்டுவதற்காக அமிதாப், அமீர் கான்ஆகியோரிடம் பேச உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் ட்விட்டர் கொட்டி தீர்த்துள்ளார் கமல். அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளை கீழே பாருங்கள்:

தன்மானத்துடன் வாழ்ந்த டெல்டா பகுதி மக்கள், இன்று நட்ட  நடுத்தெருவில் செய்வதறியாது, திகைத்து நிற்கின்றனர். நமக்கு "நல்ல சோறு"  போட்டவர்கள் இன்று அரசு வழங்கும்   "புழுத்துப்போன அரிசியை" சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அரசு அறிவித்திருக்கும் நிவாரணத்தொகை போதுமானதல்ல. ஆனால் அதைக் கூட 3 தவணையாக அறிவித்திருப்பது   மிகக்கொடுமையானது என்பதே எங்கள் குற்றச்சாட்டு. மக்களுக்கு முழு நிவாரணத்தொகையும் உடனடியாக, ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும்.

அரசு இயந்திரம் மேலிருந்து கீழ் வரை கால் பாவி செயலாற்றிடவேண்டும்.  நாங்கள் சென்று பார்த்த பல கிராமங்களில் "கிராம நிர்வாக அதிகாரிகள்" கூட சென்று பார்க்கவில்லை. மக்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், ”வெறும்  அறிக்கையாக காகிதத்தில், மீளாத தூக்கத்தில் ஆழ்ந்து விடக் கூடாது”.

வீடுகளை இழந்ததாக அரசு கூறும் கணக்கும், முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் கணக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றது. முகாம்கள் என்று சொல்லப்படும் இடங்கள் மிகவும் மோசமான சூழலில் இருக்கின்றது. பல இடங்களில் அரசுப்பள்ளிகளில் தான் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி வருவதற்கு வழியில்லாத நிலையில், இப்புயலுக்குப் பின்னர் விவசாயிகள் தாம் இழந்த வாழ்வாதாரத்திற்கு என்ன  செய்வார்கள்  என்பது  கேள்விக்கு  உரியதாக  இருக்கின்றது. இது  தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்.

இப்பொழுது வரை நாம் அனைவரும் செய்திருப்பது “முதலுதவி” மட்டுமே. முழு சிகிச்சை அளித்து, அடுத்த 8  வருடங்களுக்கு, தொடர்ந்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும். 

இவ்வாறு கஜா புயலின் பாதிப்புகளை இந்தியா முழுவதும் தெரியப்படுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் கமல் களமிறங்கியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் அமீர்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்தப் பிரச்சினையை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல முயன்று வருகிறார் நடிகர் கமல்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamalhasan #mnm #Gaja cyclone
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story