அம்மன் ஊர்வலத்தில் சோகம்; பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து ஒருவர் பலி; 15 பேர் படுகாயம்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி.!
அம்மன் ஊர்வலத்தில் சோகம்; பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து ஒருவர் பலி; 15 பேர் படுகாயம்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி.!
காஞ்சிபுரம் பேருந்து நிலையம், கவரை தெரு அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவையொட்டி அம்மன் வீதி உலா நடைபெற்ற நிலையில், நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
அங்குள்ள பாலாஜி தெருவில், இரவு 11 மணியளவில் தேர் வந்தபோது பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். சாமி ஊர்வலத்தின்போது, புகைப்பட கலைஞர் வெங்கடேசன் (வயது 50) என்பவர் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
படம்பிடித்துக்கொண்டு இருந்தபோது, சாலையில் சென்ற கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்களின் கூட்டத்திற்குள் தாறுமாறாக புகுந்தது. இந்த விபத்தில் பொதுமக்கள், பக்தர்கள், இசைக்கலைஞர்கள் என 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் மீட்கப்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கார் ஓட்டுநர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.