ஏரி மண் அள்ளுவதை தடுத்த பொதுமக்கள்.. கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவர்.!
ஏரி மண் அள்ளுவதை தடுத்த பொதுமக்கள்.. கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவர்.!
ராணிப்பேட்டை மாவட்டம் அருகே ஏரி மண் அள்ளுவதை தடுத்த பொது மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே செங்காடு மோட்டூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து மண் அள்ளுவதற்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் முயற்சித்துள்ளது.
அந்தப் பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், ஏரி மண் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்படி கடந்த ஒன்றாம் தேதி ஏரியில் மண் அள்ளுவதற்கு வந்த ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு செங்காடு மோட்டூர் மற்றும் தகரகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட 4 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் வாலாஜா போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தகர குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், செங்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனோஜ் குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள செங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.