அடங்க மறுத்த சின்னத்தம்பி கும்கி யானைகளால் பிடிபட்டான்; பெரும் மகிழ்ச்சியில் விவசாயிகள்.!
koyamputhur - chinnaththampi elephant arrest
விவசாய நிலங்களை சீரழித்து வந்த சின்னதம்பி என்ற காட்டு யானை கும்கி யானைகளின் உதவியுடன் பிடிபட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சோமையனூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டு யானை அப்பகுதியில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட தென்னை, கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி பெரும் அட்டூழியம் செய்து வந்தது.
இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர். இருந்தாலும் தினந்தோறும் நடக்கும் இச்சம்பவம் மக்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதனால் காட்டு யானையின் மீது ஒருபுறம் கோபம் இருந்தாலும் அதற்கு சின்னதம்பி என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில், முதுமலை, சேரன், கலீம், விஜய் என்ற நான்கு கும்கி யானைகளுடன் வனத்துறையினர், காட்டு யானை சுற்றித் திரியும் பகுதிக்குச் சென்று சின்னதம்பி யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
இருந்தாலும் யானை காட்டுக்குள் சென்று மறைந்து உள்ளது. எனினும் அதிகாரிகள்,
காட்டு யானையை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். தற்போது இந்த யானை பிடிப்பட்டுள்ள நிலையில் பொள்ளாச்சி டாப் ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.