விபத்தில் பலியான மகன்.. தாயிடம் நகையை பறித்த மர்ம கும்பல்.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்.!
விபத்தில் பலியான மகன்.. தாயிடம் நகையை பறித்த மர்ம கும்பல்.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து சோகம்.!
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழக்க, வீட்டில் தனியே இருந்த அவரது தாயாரிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போயர் நகர் பகுதியில் சதீஷ் (வயது 19), அருண் (வயது 21), பரணி (வயது 20) ஆகிய 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற மர்ம வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். அருண் மற்றும் பரணி படுகாயத்துடன் மயக்கமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த போது அவ்வழியாக பிற வாகனங்கள் ஏதும் வராத காரணத்தால், விபத்து குறித்து தகவல் தெரிவிக்க இயலவில்லை. சுமார் 20 நிமிடங்கள் கழித்து அவ்வழியாக சென்றவர்கள் விபத்தை கண்டு மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்து இருந்த பிற 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த 3 பேரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்துவிடவே, சதீஷின் தாயார் சாந்தி (வயது 46) உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார்.
மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தங்களையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறி, சாந்தியை தாக்கி நகைகளை பறித்து சென்றுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.