திருப்பதியை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு! ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள்! குஷியில் பக்தர்கள்!
laddu in madurai meenachi amman temple
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவில் 1,600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. அதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கிய விழாவாக ஆண்டுதோறும் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வரும் அனைவருக்கும், தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தீபாவளி திருநாளான வருகிற 27.10.2019-ந் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் எந்திரத்தை வாங்கி இருக்கிறோம். இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும். இதற்காக அரசிடம் அனுமதி பெற்று விட்டோம். தமிழகத்திலேயே அறநிலையத்துறை கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்தான் முதன்முதலாக லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.