தமிழக முதல்வர் திடீர் அறிவிப்பு.! உச்சகட்ட குஷியில் தமிழகம்.! முதல்வருக்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்.!
தமிழகத்தில் தைப்பூசத் திருநாளில் பொது விடுமுறை விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா "தைப்பூச திருநாள்" . இந்த தைப்பூசத்திருவிழா உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்தும், காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் பாதயாத்திரையாக, பழநி மலை சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.
தைப்பூசத் திருவிழாவுக்கு பல நாடுகளில் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே போல், தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவுக்கு பொது விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் கடவுளாகிய முருக பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூச திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல நாடுகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, பல நாடுகளில் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூச திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
தைப்பூசத்துக்கு தமிழக அரசு வெளியிட்ட விடுமுறை அறிவிப்பால் ஆன்மிக பெரியோர்கள், ஹிந்து அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் அறிவிப்பை உடனடியாக செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று இரவு அரசாணை வெளியிட்டுள்ளது.