3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு! புயலாக மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
low depression became as cyclone
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, 'பெய்ட்டி' புயலாக உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழையும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, இந்த புயலானது சென்னைக்கு கிழக்கு, தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது 17 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து, வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரம் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே திங்கள்கிழமை (டிச.17) பிற்பகலில் கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சென்னை எண்ணூர், திருவொற்றியூர், காசிமேட்டில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் தடுப்புகளைத் தாண்டி சாலை வரை வந்து செல்கிறது. மேலும் நாகை, காரைக்கால், வேளாங்கண்ணியில் சனிக்கிழமை கடல் சீற்றமாகக் காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காலை முதலே காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி, கடலுார், நகை துறைமுகத்தில், 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்புமாறும், புயல் கரையை கடக்கும் வரை கடலில் மீன் பிடிக்கக் கூடாது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.