'திமுக, அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் கூட தொடர்பு இருக்கு'.. பணமோசடியில் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி.!
'திமுக, அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் கூட தொடர்பு இருக்கு'.. பணமோசடியில் கொலை மிரட்டல் விடுத்த தம்பதி.!
திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை தெரியும் எனக் கூறி ரூ.47 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம். இவர் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், "தணிக்கை நிறுவனம் நடத்தி வந்த தன்னிடம் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீ புகழ் இந்திரா, தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனுடன் சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார்.
பின் ஆட்சி மாறியதும் திமுகவில் முக்கிய பொறுப்புகள் வகித்து வரும் தலைவர்களிடமும் தனக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த நிலையில், முன்னாள் முதல்வர் வரை இந்நாள் முதல்வர் வரை அனைவரிடமும் நான் நெருக்கமாக உள்ளதாக கூறினார்.
இதன் காரணமாக அரசு துறையில் என் மகளுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, மற்றொரு பெண்ணை பேச வைத்து நம்ப வைத்தார். இதனால் பல தவணைகளாக நான் அவர்களுக்கு ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியுள்ளேன்.
ஆனால், எனது மகளுக்கு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்ததால் பணத்தை திரும்ப தரும்படி கேட்டபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஸ்ரீ புகழ் இந்திரா மற்றும் அவரது மனைவியை கைது மீது வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.