கிராமத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்..! டிக் டாக் செயலியால் நேர்ந்த விபரீதம்..!
Madhurai suganthi tik tok issue
டிக் டாக் மோகத்தால் தங்கள் கிராமத்தை அசிங்கப்படுத்திய இளம் பெண் ஒருவரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள சம்பவம் தேனியில் நடந்துள்ளது. தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகந்தி (32). சென்னையில் சினிமா கம்பெனி ஒன்றில் மேக்கப் போடும் பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார் இந்த சுகந்தி.
இந்நிலையில் மதுரை சுகந்தி என்னும் பெயரில் டிக்டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார் சுகந்தி. இதில், மதுரையை சேர்ந்த அய்யர்பங்களா மீனாட்சி, ஒத்தக்கடை கயல்விழி ஆகியோருடன் சுகந்திக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலால் காவல் நிலையம் வரை சென்று பஞ்சாயத்து நடந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் சுகந்திக்கும், ஒரு ஆணுக்கும் இடையே டிக் டாக்கில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, சுகந்தியையம் அவரது சொந்த ஊரான நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்களையும் தரக்குறைவாக பேசி அந்த ஆண் வீடியோ ஒன்றை வெளியியிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தங்கள் கிராமத்து பெண்களை அவதூறாக பேசிய இளைஞர் மற்றும் அதுக்கு காரணமாக இருந்த சுகந்தி மீது நடவடிக்கை எடுக்க கூறி நாகலாபுரம் கிராமத்து மக்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும், நாகலாபுரத்தில் கிராம மக்கள் நேற்று ஒன்று கூடி, தங்கள் கிராமத்தையும், கிராமத்துப் பெண்களையும் அவமானப்படுத்திய சுகந்தியுடன் யாரும், எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.