விமான நிலையத்தில் மர்ம பொருளை வீசிய பயணி: பரபரப்படைந்த விமான நிலைய ஊழியர்கள்..!
விமான நிலையத்தில் மர்ம பொருளை வீசிய பயணி: பரபரப்படைந்த விமான நிலைய ஊழியர்கள்..!
மதுரை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை பயணி ஒருவர் சுங்கத்துறையினருக்கு பயந்து வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து 170 பயணிகளுடன் விமானம் நேற்று (வியாழக்கிழமை) மதுரை வந்ததையடுத்து, பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறையினர் பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குப்பைத் தொட்டியில் பேஸ்ட் போன்ற ஒரு மர்ம பொருள் இருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சுங்கத்துறையினர் மர்ம பொருளை கைப்பற்றி சோதனை செய்ததில் அதில் ரூ.14 லட்சத்து 36 ஆயிரத்து 472 மதிப்புள்ள 287 கிராம் தங்கம் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துபாயில் இருந்து வந்த பயணிகளில் யாரோ ஒருவர் தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் எனவும், சுங்கத்துறையினருக்கு பயந்து அவர் குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் சுங்கத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக குப்பைத் தொட்டியில் யார் தங்கத்தை வீசி சென்றது என்பது குறித்து விமான நிலையத்திற்குள் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.