பேருந்தின் படிக்கட்டில் பயணம்.. கண்டித்த ஓட்டுநர், நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்.. 5 பேர் கும்பல் வெறிச்செயல்.!
பேருந்தின் படிக்கட்டில் பயணம்.. கண்டித்த ஓட்டுநர், நடத்துனர் மீது சரமாரி தாக்குதல்.. 5 பேர் கும்பல் வெறிச்செயல்.!
திருமங்கலம் அருகே அரசு பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த 5 இளைஞர்களை கண்டித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், கீழ்கோட்டை கிராமத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக திருமங்கலத்தை சேர்ந்த ஜெயவீரபாண்டி (வயது 35), நடத்துனராக கள்ளிக்குடியை சேர்ந்த சோலைமுத்து ஆகியோர் இன்று பணியில் இருந்தனர். பேருந்து திருமங்கலம் வழியே சென்றுகொண்டு இருந்தது.
அப்போது, 5 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் பேருந்தில் ஏறி படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த நிலையில், இதனைகவனித்த நடத்துனர் பேருந்திற்குள் ஏறி வர அறிவுறுத்தியுள்ளார். இதனை கேட்காத கும்பல் அவரை தகாத வார்த்தையால் திட்டவே, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி 5 பேர் கும்பலுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கட்டை மற்றும் கற்களை எடுத்து வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கி தப்பி சென்றுள்ளது. பலத்த காயமடைந்த இருவரையும் பயணிகள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.