நடிகர் சூர்யாவிற்கு குவிந்துவரும் ஆதரவு! பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர்களும் ஆதரவு!
many political leader support to actor surya
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. இதனை முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி சமாளிக்க போகின்றனர். எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.
நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனாலும் சூர்யாவின் கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது ஆதரவை சூர்யாவுக்கு அளித்துள்ளார். அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், "தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண, பா.ம.க சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வுக்கும் எக்ஸிட் தேர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை. இது ஜனநாயக நாடு. கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது’ என தெரிவித்துள்ளார். அதேபோல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஜனநாயகத்தில் எந்த குடிமகனுக்கும் கருத்துக்கூற உள்ள உரிமையை எந்த அரசும், தனிநபர்களும் தடுக்கவோ, பறிக்கவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ, அதை வைத்து வேறு வழிகளில் பழிவாங்கவோ உரிமை இல்லை. துணிவுள்ள, தெளிவுள்ளவர்கள் சொல்வதைக் கண்டு பாராட்ட முடியாவிட்டாலும், மவுனமாகவாவது இருப்பதுதான் அரசுக்கு நல்லது என தெரிவித்துள்ளார்.