சோறுபோட்ட உரிமையாளர்களை கூறுபோட்டு, கொன்று புதைத்த ஓட்டுநர்.. நேபாள ஓட்டுனரால் தமிழக தம்பதி படுகொலை..!
சோறுபோட்ட உரிமையாளர்களை கூறுபோட்டு, கொன்று புதைத்த ஓட்டுநர்.. நேபாள ஓட்டுனரால் தமிழக தம்பதி படுகொலை..!
முதிய தம்பதியினரை கொன்று புதைத்து அவர்கள் வீட்டிலிருந்த 20 லட்சம் பணம் மற்றும் நகைகளை சுருட்டிக்கொண்டு, தப்ப முயன்ற கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஸ்ரீகாந்த்- அனுராதா தம்பதியினர். இவர்கள் தனது மகள் சுனந்தாவை காண்பதற்காக அமெரிக்கா சென்று விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது தம்பதியினரை அவர்களது கார் ஓட்டுநரான நேபாளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் காரில் அழைத்து வந்து இல்லத்தில் இறக்கி விட்டுள்ளார். இதனை தொடர்ந்து சுனந்தா தனது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று இருப்பார்கள் என எண்ணி போன் செய்துள்ளார்.
ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்து தனது உறவினர் ஒருவரை செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். பின் அவர் மயிலாப்பூரில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உறவினரை விசாரித்தபோது, கார் ஓட்டுநர் கிருஷ்ணாவின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இதனால் கார் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
அப்போது சென்னையிலிருந்து நேபாளத்திற்கு தப்பிக்க முயன்ற அவரை, ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கிருஷ்ணா முதிய தம்பதியினரை ஈ.சி.ஆர் நெமிலிச்சேரி பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் கொன்று புதைத்தது தெரியவந்தது .
மேலும், அவர்களது வீட்டிலிருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை தனது நண்பர் ஒருவரின் உதவியோடு கொள்ளையடித்து தப்ப முயன்றதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தம்பதியரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கார் ஓட்டுநரின் நண்பரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.