நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மினி லாரி!,.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!
நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய மினி லாரி!,.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாப பலி..!
சாலையோரம் நின்ற லாரி மீது மினி லாரி மோதியதில் தந்தை-மகன் உள்பட 4 பேர் பலியானார்கள், 3 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள அண்ணாமலைநகர், டைல்ஸ் கடை உரிமையாளர் செல்வகுமார் (40). இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி திருச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர். இவருடைய மாமனார் பூராசாமி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மாதானம் அகரம் வட்டாரம் என்ற கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
வீடுகட்டும் பணிக்காக செல்வகுமார் தனது டைல்ஸ் கடையில் இருந்து டைல்ஸ்களை ஏற்றிக்கொண்டு மினிலாரியில் மாமனார் ஊருக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். அப்போது அவர் தனது 3 வயதான மகன் மிதுல், தனது மனைவியின் தங்கை கற்பகவள்ளி (25) மற்றும் டைல்ஸ் பதிக்கும் தொழிலாளர்களான தம்மம்பட்டி அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த குமார் என்கிற சிவக்குமார்(34), அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (34), ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியை சேர்ந்த பெருமாள் (52) ஆகியோரை மினிலாரியில் அழைத்துச் சென்றார்.
செல்வகுமார், கற்பகவள்ளி, மிதுல் ஆகியோர் மினிலாரியின் டிரைவர் கேபினில் அமர்ந்து பயணம் செய்தனர். சிவக்குமார் உள்ளிட்ட தொழிலாளர்கள் 3 பேர் மினிலாரியின் பின்புறம் டைல்ஸ் பாரம் மீது அமர்ந்து பயணம் செய்தனர். மினிலாரியை சேலம் நாகியம்பட்டி கிராமத்தை சேர்ந்த நகுலேஸ்வரன் (22) என்பவர் ஓட்டினார்.
அந்த மினிலாரி நேற்று அதிகாலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம்-சீர்காழி சாலையில் சென்று கொண்டிருந்தது. சிதம்பரம் அடுத்த கூத்தங்கோவில் புறவழிச்சாலையில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி கண்இமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி செல்வகுமார், குழந்தை மிதுல், கற்பகவள்ளி, மினிலாரி டிரைவர் நகுலேஸ்வரன் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினிலாரியின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்த சிவக்குமார் உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரவிச்சந்திரன், மகேந்திரன், ஏட்டுகள் பண்டாரநாயகன், ரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான தந்தை-மகன் உள்ளிட்ட 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.