புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும்.! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.!
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் வைக்கப்பட்டது. தற்போது திரிகோணமலையில் இருந்து 530 கிமீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து நாளை மாலை அல்லது இரவில் இலங்கையில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கர்நாடகா, கேரளா, கோவா, லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று மாலை தமிழகம் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.