தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது? மாணவர்கள் சேர்க்கை எப்போது நடைபெறும்.? அமைச்சர் செங்கோட்டையன்
minister sengottayan talk about school open
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது.பொதுவாக அனைத்து வருடமும் புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதத்தில் துவங்கும். இதற்கான மாணவர்கள் சேர்க்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும். ஆனால் கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது.
இந்தநிலையில் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது, ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது பள்ளிக்கு போவார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. இந்த தகவலுக்கு பள்ளி கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது. சூழ்நிலை சரியானதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.