முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும்..! நான் வருகிறேன்!. ஆ.ராசாவிற்கு பகிரங்க சவால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!
எங்கு வரவேண்டும்? ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி நான் பேச தயார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் மூன்று நாட்கள் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க நான் தயார். முதலமைச்சர் தயாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும். நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக. முதலமைச்சர் எடபடியாரை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
காமராசரை பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதையே கிடையாது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது காமராசருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் கோரியபோது, முன்னாள் முதல்வருக்கு கிண்டி அருகே உள்ள தியாகிகள் நினைவிடத்தில் தான் இடம் கொடுக்க முடியும் என கூறியவர்தான் கலைஞர். ஆனால் காமராசர் அப்போது கண்ட கனவை தற்போது எடப்பாடியாரின் ஆட்சி நிறைவேற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.