தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் தொடரும்! மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர் தங்கமணி!
minister Thangamani talk about free elctricity
இந்தியாவில் மின்சார துறை தனியார் மயமாவதற்கு மத்திய நிதி துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில் போதுமான மழை இல்லாததால் விவசாயம் முடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தடைபடும் நிலையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்தநிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை தமிழக மின்சார வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச மின்சார திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பதுதான் தற்போதைய முதல்வரின் எண்ணமுமாகும்.
அதனால் தான் புதிய மின்சார திட்டம் அறிவிப்பு வந்தபோது, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். அதற்காக தமிழகத்தில் உள்ள இலவச மின்சார திட்டம் எந்த காரணத்தை கொண்டும் ரத்து செய்ய கூடாது என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் என தெரிவித்தார். எனவே யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை, இலவச மின்சார திட்டத்தில் எந்த பாகுபாடும் இருக்காது என தெரிவித்தார்.