மருந்து கிடைக்காமல் தவித்த வயதான தம்பதியர்; அமைச்சர் விஜயபாஸ்கரின் துரித நடவடிக்கையால் குவியும் பாராட்டு!
Minister vijayabaskar helped old people to get medicines
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் ஒருசில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் தனிமையில் இருக்கும் வயதானவர்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் பெற சிரமப்படுகின்றனர்.
இப்படி தான் கோயம்புத்தூர் மாவட்டம் ஆணைமலையை சேர்ந்த 93 மற்றும் 87 வயதான தம்பதியினர் தங்களுக்கு தேவையான மருந்துகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இவர்கள் இருவர் மட்டுமே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் பேத்தியான சௌந்தர்யா என்பவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தனது ட்விட்டர் கணக்கின் மூலம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பிரதமர் மோடியிடம் உதவி கேட்டு பதிவிட்டார். அதில் கோயம்புத்தூரில் இருக்கும் மருந்தகம் கொரியர் மூலம் மருந்துகளை அனுப்ப முடியாது என கூறியதையும் பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் தகவல்களை கேட்டறிந்துள்ளார். அதன் தொடர் நடவடிக்கையாக இன்று காலை அந்த வயதானவர்களின் வீட்டிற்கே ஆட்கள் மூலம் மருந்துகளை அனுப்பி வைத்துள்ளார்.
அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையால் மெய்சிலிர்த்த அந்த பெண் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனது தாத்தா மற்றும் பாட்டி மருந்துகளை பெற்றுக்கொள்ளும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு மேலும் ஒருசிலர் அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.