தமிழகத்தில் குறையாத பலி எண்ணிக்கை.! ஊரடங்கில் தளர்வுகள் வருமா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அத
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 17,321 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கொரோனவால் நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 405 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆனாலும் தற்போதுவரை கொரோனா பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 7-ந் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் தொடர்பாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.