தேர்தல் நேரத்தில் ஆவணங்கள் இன்றி காரில் ரூ.51 லட்சம்.! பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை.!
தேர்தல் நேரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் புறவழிச் சாலை பகுதிகளில் கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கடலூரில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் 27 பறக்கும்படை அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கடலூர் அருகே புதுவையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அதில், ஒரு காரில் 51 லட்சம் ரூபாய் பணம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படை அதிகாரிகள் பணம் எடுத்துவந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர் தனியார் தொழிற்சாலை நடத்துவதாகவும் அதற்காக பணம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் உரிய ஆவணம் இல்லதாதால் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.