வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்... பிரசவத்தின் போது தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழப்பு... மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!!
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்... பிரசவத்தின் போது தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழப்பு... மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஆவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் - மல்லிகா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் இருந்த சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் பணியில் பணியில் இல்லாத காரணத்தால் பணியில் இருந்த செவிலியர்களே மல்லிகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இந்நிலையில் மல்லிகாவுக்கு பிரசவம் நடந்த சில மணி நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளது. அதனை தொடர்ந்து, அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டு மல்லிகாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் மல்லிகாவின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தான் தாயும், சேயும் உயிரிழந்ததாக கூறிய மல்லிகாவின் உறவினர்கள் பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.