தீபாவளிக்கு மட்டும் இத்தனை கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனையா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!
mutton sales for diwalli
தீபாவளி என்றாலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆடு விற்பனை சூடுபிடிக்க துவங்கிவிடும். குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள ஆட்டு சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் கடைகளிலும் ஆட்டுக்கறியின் விலை கூடிக்கொண்டே போய் விடும்.
விவசாயம் சார்ந்த பகுதிகளில் உபதொழிலாக ஆடு வளர்ப்பதும் முக்கிய தொழிலாக நடைபெறும். குறிப்பாக, இறைச்சிக்காக வளர்க்கப்படும் வெள்ளாடு, செம்மறி ஆடுகள் பண்டிகை காலங்களில் நல்ல விலைக்கு விற்பனையாகும். இதனால் ஆடுகள் வளர்ப்பதையே தொழிலாகக் கொண்டவர்களும், கைச் செலவுக்காக ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளும் இதுபோன்ற பண்டிகை காலங்களில் தங்கள் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆடுகளை வளர்த்து வருவார்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த வருடம் தமிழகத்தின் முக்கியமான ஆட்டு சந்தைகளில் எத்தனை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்பட்டுள்ளன என்பதைப்பற்றி பார்க்கலாம்:
செஞ்சி:
தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்ற வாரச்சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை விற்பனைக்கு வந்தன. இந்நிலையில் அன்று நடந்த நடந்த வாரச்சந்தைக்கு பெங்களூர், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகள் வாங்க அதிகாலை முதலே குவிந்தனர். அதிகாலை 3 மணியில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தேவை அதிகமாக இருந்ததால் காலை 8 மணிக்கே அனைத்து ஆடுகளும் மளமளவென விற்றுத் தீர்ந்தன. சுமார் 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலை கூட்டுரோடு பகுதியில் வெள்ளிக் கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதில் கடலூர், சேலம், நாமக்கல், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கிக்சென்றனர். அன்று காலை மட்டும் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. அன்று மழை கொட்டியதால் வியாபாரிகள் வருகை குறைந்து விற்பனையும் சற்று சரிவடைந்தது.
எட்டயபுரம்:
எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 5 ஆயிரம் ஆடுகள் ரூ.4 கோடிக்கு விற்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள முக்கிய சந்தைகளில் ஒன்றான எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வெள்ளிக்கிழமை இரவே துவங்கி சனிக்கிழமை மதியம் முடிவடையும். வழக்கமாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் ஆடுகள் வரை விற்கப்படும். ஆனால் இந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. சராசரியாக 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.5,500 முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்கப்பட்டன.
விழுப்புரம்:
தீபாவளி பண்டிகை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செட்டிபாளையம் வாரச் சந்தையில் 6 மணி நேரத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. வழக்கமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் வார சந்தையில் சுமார் 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறும். ஆனால் சென்ற வாரம் அதிகாலை 3 மணிக்கே தொடங்கிய சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர். ரூ.8000 முதல் ரூ.15000 வரை ஆடுகள் விற்பனை ஆன நிலையில் 6 மணி நேரத்தில் ரூ.7 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமயபுரம்:
சனிக்கிழமைதோறும் கூடும் சமயபுரம் ஆட்டுச்சந்தை ஆடுகள் மட்டுமே வாங்க, விற்க சிறந்த இடம். இங்கு ஒவ்வொரு வாரமும் இரவே ஆடுகள் கொண்டு வரப்பட்டு, சனிக்கிழமை காலை 6 மணிக்கு கூடிய ஆட்டு சந்தையில் மின்னல் வேகத்தில் ஆடுகள் விற்று தீர்ந்தது. வழக்கம் போல திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுகை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் முதல் நாள் இரவே கொண்டு வரப்பட்டது. ஒரு ஆடு ரூ.2 ஆயிரம் விலையில் துவங்கி அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை விற்றது. 9 மணிக்குள் அனைத்து ஆடுகளும் விற்று விட்டன. அதாவது 4 மணி நேரத்தில் ஏறத்தாழ ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள், தரகர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள், தரகர்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு திரும்பினர்.