சமூகப்போராளி நந்தினிக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்! திடீரென்று சிறையில் அடைக்கப்பட்ட நந்தினி!
nanthini and her dad arrested
திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்திய இளம் பெண் மற்றும் அவரின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. சமூகத்தில் இருக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் தொடர்ந்து தன் தந்தையுடன் குரல் கொடுத்து வருபவர் மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி. அந்த வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதால், சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் இதற்கான வழக்கு விசாரணை நேற்று திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில், நீதிபதியிடம் வாதாடிய நந்தினி, மது போதை பொருளா, மருந்து பொருளா? போதை பொருள் என்றால் சட்டப்படி விற்கக் கூடாது. அதனை விற்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும், ஐபிசி 328ன் படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நந்தினி, நீதிபதியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் நந்தினி மற்றும் அவரது தந்தை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நந்தினிக்கு திருமணம் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவிருக்கும் நிலையில், அவர் மற்றும் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நந்தினி மற்றும் அவரது தந்தையை உடனடியாக விடுதலை செய்யக்கோரி “Release Nandhini “ என்ற ட்விட்டர் பதிவானது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.