சென்னையில் அதி தீவிரமாக பரவும் வைரஸ்! கொரோனா வார்டாக மாறும் நேரு உள் விளையாட்டு அரங்கம்.!
nehru stadium as a corona ward
சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கம் 600 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம், 25ம் தேதி, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 624 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், இனி வரும் நாட்களில் ரயில், விமான, பேருந்து வழி பயணங்கள் நாடு முழுவதும் தொடங்கப்படுவதால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் 600 படுக்கைகள் கொண்ட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசு ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் சென்னை வர்த்தக மையத்தை கொரோனா வார்டாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.