ஊரடங்கால் எளிமையாக நடந்த திருமணம்! புதுமண தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி காரியத்தால் குவியும் வாழ்த்துக்கள்!
new married couples help srilanka peoples
கரூர் மாவட்டம் மண்மங்கலத்தில் வசித்து வருபவர் சிவகுமார். இவர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவருக்கு குளித்தலை புணவாசிபட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருடன் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்காக சிவகுமார் வீட்டில் 1500 பத்திரிக்கைகளும், மகாலட்சுமி வீட்டில் 1000 பத்திரிகைகளும் அச்சடிக்கப்பட்டு, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனோவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டநிலையில், 20 பேரை மட்டும் கொண்டு திருமணம் மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிலையில் தங்களது திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை ஏதேனும் நல்ல காரியத்திற்கு பயன்படுத்தவேண்டுமென என அந்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கலந்தாலோசித்து மகாலட்சுமி ஊரின் அருகே இரும்பூதிபட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 150க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கூலி தொழில் செய்து வாழ்ந்துவரும் நிலையில், ஊரடங்கால் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு இந்த தொகையை வைத்து ஏதேனும் பொருட்கள் வாங்கிக் கொடுத்து உதவி செய்யலாம் எனவும் முடிவு செய்துள்ளனர்.
பின்னர் இருவரும் சேர்ந்து அவர்களுக்கு 10 நாட்களுக்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி கொடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறுகையில், நாங்கள் அவர்களுக்கு பொருட்கள் கொடுத்து உதவியபோது நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என வாழ்த்தினர். அதனை கேட்டதும் இந்த திருமணபந்தம் முழுமை அடைந்ததாக நாங்கள் உணர்கிறோம் என்று கூறி மகிழ்ந்தனர்.